கருப்பையில் நான் இருக்கையிலே
கருப்பையில் நான் இருக்கையிலே
களித்த அந்த நாட்களை
விளக்க நினைக்கின்றேன் – என்
விளிகளுக்குள் வியர்வை ஏனோ..
உள்ளிருக்கும் நான்
உள்ளத்தில் சிறந்தவனா….?
உண்மைகள் நிறைந்தவனா…?
உனக்காக வாழ்பவனா….?
உணர்ந்ததில்லை ஏதும் நீ
கருப்பையில் இருக்கும் நான்
கள்ளம்கபடமற்றவனா…?
அன்பில் சிறந்தவனா..?
அகிலத்தை ஆழ்பவனா…?
அறிந்ததில்லை ஏதும் நீ
ஆனபோதும் – நான்
கருக் கொண்ட நாள்முதலாய் – எனை
உருக் கொண்டு பார்க்க – உன்
உடல் கொண்டு உயிர் வரைக்கு
எனக்கென்றே அர்ப்பணித்தாய்
அருவமான ஓர் பொருளை
உருவம் கொண்டு பார்க்க
உன் இரைப்பையில் ஓரிடத்தை
கருப்பையென எனக்களித்து
களிப்போடு வளர்ததாய்
உன்னுள் நான்
உருள்வதும் புரள்வதும்
உணர்ந்துகொள்ள
உதரத்ததின மேல்வைத்த கையை (உதரம் – வயிறு)
ஒரு நொடியும் நீ எடுத்ததில்லை
புரண்டுபடுத்தால் நான்
இறந்துவிடுவேனோ என
கருப்பையில் நான் இருக்கையிலே
நீ கண்ணயர நினைத்ததில்லை
சிலநொடிகள் என் துடிப்பு நின்றால்
பலநொடிகள் நீ துடித்துவிடுவாய்
அறியாமல் நான்
உன்வயிற்றில் உதைக்கையிலே
உளமாற நீ மகிழ்ந்திருப்பாய்
நீ இருப்பதும் எழுவதும்
உண்பதும் உடுப்பதும்
எனக்கென வளைந்துகொடுத்தாய்
உனதுயிரில் எனக்குயிர் கொடுத்து
உன் உதிரத்தில் என்னுடல் வளர்த்தாய்
உள்ளிருந்த வேளையிலும் நான்
உணர்ந்து கொண்டேன் ஓருண்மை
தொட்டுப் போகும் உறவுகளில்
விட்டுப் போவதில்லை என்றும்
தொப்புள் கொடி உறவு மட்டும்