சுகம்…….

Posted in Uncategorized on November 9, 2009 by singingstarvijay

தத்தி தத்தி
தவழ்கையிலே
தாய்ப்பால் சுகம்

அடியெடுத்து
அன்னநடை பழகையிலே
அருமைத்தந்தையுடன்
அங்குமிங்கும் செல்தல்
அளவற்ற சுகம்

பள்ளிப்பருவமதில்
பத்துநிமிட இடைவேளையிலே
பலநூறு ஆட்டங்கள்
ஆடுவதுதான்
என்ன சுகம்

வளர்ந்துவரும் பருவமதில்
தொடர்ந்துவரும்
நட்பு சுகம்
தொலைதூரப் பயணங்கள்
சொல்லொண்ணா சுகம்

பதினாறு வயதினிலே
பற்றிக்கொள்ளும் காதல்சுகம்
அப்பப்போ அவள்மீது கொள்ளும்
அன்பான ஊடல்சுகம்
அணைக்கையிலே அதிகசுகம்

கட்டிய மனைவி சுகம்
கடந்தகால நினைவுகளை அவளோடு
கதையாகச் சொல்லி
களிப்படைதல்
கனிவான சுகம்

பெற்றெடுத்த பிள்ளைசுகம்
பேரழவு நேரங்கள்
மழலைமொழி பேசி
மகிழ்ந்திருத்தல்
மட்டற்ற சுகம்

இத்தனை சுகங்கள் கண்டும்
ஏழுகளுதை வயது வந்தும்
தத்தி தத்தி தவழ்கையிலே
தாய்ப்பாலூட்டிய
தாய்மடியில் தலைசாய்தல் போல்
தரணியிலே சுகமுண்டோ……….

Advertisements

இதுவும் காதலா………..?

Posted in Uncategorized on November 6, 2009 by singingstarvijay

அந்த அழகிய காலைப் பொழுது
அவளது தொலைபேசி அலறியது
அவனின் காத்திருப்பு
அவளுக்கு புரிந்தது
அடுத்தொரு யோசனையுமின்றி
அக்கணமே புறப்பட்டாள்
அவனைக்காண

அன்பே,
ஆருயிரே,
கண்ணே,
மணியே, என
காலை முதல் மாலை வரை
மணிக்கணக்கில்….
அவனோடு…..

அந்த அழகிய (அழுகிய) மாலைப்பொழுது..
மீண்டும் அவள் தொலைபேசி அலறியது..
அப்போதுதான்…
அயல்நாடு சென்ற அருமைக்காதலன்
அவள் நினைவைத் தொட்டது…
தொட்டகுறை விட்டகுறை என
இங்கு இவனை விட்டுவிட்டு
எழுந்து சென்றாள்
எங்கோ இருக்கும் தன் காதலனோடு
இனிய ​மொழி ​பேச
இதுவும் காதலா……………….?

எங்கேயுன் மனசாட்சி

Posted in Uncategorized on October 26, 2009 by singingstarvijay

ஓ மனிதா எங்கேயுன்
மனசாட்சி
மறைத்துவைத்துவிட்டு
மனிதவேடம் பூணுகிறாயா
மரிக்கும்முன் வேடம்கலைத்து மனிதனாகவாழ்

உன்னைப்படைக்கும் இறைவன்
உனக்குத்துணையாகவே
உனக்கென்றொரு மனசாட்சியும் படைக்கிறான்
உபயோகப்படுத்தமறுப்பதேன்
உண்மையற்று வாழ்வதேன்

ஊனமற்ற உடலோடு படைத்தானுனையிறைவன்
ஊனம் நிறைந்த உளத்தோடு வாழ்கின்றாய் நீ
உன்மனசாட்சியோடுகொஞ்சம் உரையாடிவிடு
ஊனங்கள் களைவாய் உன்னையே நீ உணர்வாய்
உன்னத இன்பமும் அடைவாய்

உண்மையின்பம் எதுவென அறியாது
உலக இன்பத்தில் உறைந்துள்ள நீ
உறங்குமுன்மனசாட்சியை உடனெழுப்பிக் கேள்
உண்மைகள் பல அறிவாய்
உன்னதனெனும் பெயர் பெறுவாய்

அன்பென்பதேயறியாது
அரக்கனைப் போல் வாழும் நீ
அறிந்துவாழுன்மனசாட்சியை
இரக்கம்கொண்டு வாழ்வாய்
இம்மையிலே இன்பமும் அடைவாய்

பிறப்பின் நோக்கமறியாமல்
பிறரைக் கெடுத்துவாழும் நீ
பின்பற்றிவாழுன்மனசாட்சியை
பிறப்பின் நோக்கமும் அறிவாய்
பிறவிப்பயனுமடைவாய்

இறுதியாகக் கூறுகின்றேன் கேள்
இறைபக்தியற்று ஈனமாக வாழும் நீ
இருக்குமுன் மனசாட்சியைக் கேள்
இறுதிவரை இறைமகனாய் வாழ்வாய்
இறந்தபின்னும் இறைபக்கத்திலிருப்பாய்

இனி வருமோ

Posted in Uncategorized on October 23, 2009 by singingstarvijay

அன்புத்தந்தையே எனை
அழவிட்டு சென்றதேனோ
உன்னோடு நானிருந்த
உன்னத நாட்கள்தான் இனி வருமோ

பிஞ்சுப் பருவமதில்
உன் நெஞ்சிலன்றி
பஞ்சுமெத்தையில் கூட
படுத்துறங்கி நானறியேன்

தோள்மீது நானிருந்து
தொல்லை பல கொடுத்திடுவேன்
தொல்லையென்று தெரிந்தும் உனக்கது
எல்லையற்ற இன்பமென்றோ

கால் இடறி நான் விழுவேன்
வலியெதுவும் எனக்கில்லை
ஆனபோதும் உன்
விழிவளியே நீர் கசியும்

என் கண்ணில் தூசு பட்டால்
கணப்பொழுதில் நான் மறப்பேன்
கள்ளமற்ற உன் வெள்ளையுள்ளம்
எண்ணி எண்ணி கலங்கிடுமே

பள்ளிப் பருவமதில்
செல்ல மறுத்திடுவேன்
உன் பண்பான வார்த்தை கேட்டு
பட்டென்று பறந்திடுவேன்

தலை நிமிந்து நிற்கின்றேன்
தரணியிலே நானின்று
இருந்த போதும் தவிக்குறது நெஞ்சம்
தந்தையே உன் தயவின்றி

இறைஞ்சுகின்றேன் இறைவனிடம்
இன்னோரு ஜென்மம்
உன்னோடு நானிருக்கும்
உன்னத நாட்களுக்காய்…….

ஓர் ஏழையின் குமுறல்

Posted in Uncategorized on October 23, 2009 by singingstarvijay

ஏனோதெரியவில்லை
இனம்புரியாதசொகம்
எனைத்தொடர்கின்றது
அடிக்கடியென்மனம்
அமைதியற்று
அல்லல்படுகின்றது

மனம்விட்டுபேசிவிட்டால்
மகிழ்ச்சிவருமெனநினைத்தால்
எதைப்பேசுவது……….?

எப்படிப்பேசுவது…………….?
யாருடன்பேசுவது……………?
இதற்கே இத்தனைவினாக்கள்

இரத்தஉறவுகள்கூட
இல்லாதவனென்பதால்
உரைக்கமறுக்கின்றன
உறவாளனென்று
மறந்துவிடுகின்றன
இவனும் மனிதனென்பதை

மகிழ்ச்சி துக்கம்
இவையிரண்டிற்கும்
எனக்குள்ளே
இடைவிடாத போராட்டம்
துக்கம் தோற்கடிக்க
மகிழ்ச்சியோ வெகுதொலைவில்

சிலசந்தர்ப்பங்களில்
சிரிக்கமுற்படுகையில்
அழுகையே முந்திக்கோள்கின்றது
பலநினைவுகளை
மறக்கநினைக்கையில்
மாறாமல் நினைவுகளில் அவையே

அவைநடுவே நான்சென்றால்
அவமதிப்போர் பலர்
அருவருப்பாக பார்ப்போருமுளர்
சபைநடுவே நானுரைக்கும் கருத்து
சந்தியில்கிடக்கும்
சருகுபோலாகின்றது

கல்லிலெழுதிய எழுத்துப்போல்
கசப்பானநினைவுகள்
மாறாதவடுக்களாயென்னுள்
கங்கையிலிட்ட காகிதக்கப்பல்போல்
கணப்பொழுதுகளில் மட்டுமே
மகிழ்ச்சியென்னுள்

சிலந்திவலையில் சிக்கிய
சிறுபூச்சிபோல்
சிலசமயம் என்னுணர்வுகள்
பாதைதவறிய
பாலகன்போல்
பலசமயமென்தவிப்புக்கள்

பட்டாம்பூச்சிபோல்
பறந்துதிரிய நினைக்கையில்
கூண்டிலடைபட்ட கிளிபோல்
கொடுமையான நினைவுகள்
தூண்டிலிடப்பட்ட மீன்போல்
துயரத்தில்நான்

ஏழையென்பதாலா
இத்தனைவலிகளுமெனக்குள்
என்னோடுமுடியட்டும்
இறைவா
என்னோடுமுடியட்டும்
ஏழையென்னும் சந்ததி…………

கைதியா இவன்………..?

Posted in Uncategorized on October 21, 2009 by singingstarvijay

கைதியா இவன்……..?
கண்களைமட்டுமல்ல
கடவுளையும் கூட
நம்பமுடியவில்லை
காலத்தின் சோதனையா இது…..?
கயவர்களின் சதியா இது…..?
இன்றுவரை ஏற்கமுடியவில்லை
இனியவனின் நிலையை……………….

எங்கிருந்தோ வந்தான்
ஏட்டுக்கல்விதனை பெற்றிடவே
உயர்ந்துநின்றான்
உயர்கல்வி தனிலே……
பல்கலைக்கழகம் சென்றான்
பல்கலையும்கற்றிடவே
பழகிவந்தான் பண்புடனே
பலருடனும்……….

“சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்”
இத்தனையும் கண்டேன்
இவனிடமே நான்
இவன் வரைந்துவிட்ட ஓவியங்களை
வர்ணிக்க வார்த்தைகளேயில்லை
பள்ளிக் கூடம்முதல் பல்கலைக்கழகம் வரை
இவன் ஓவியம் இல்லாத இடமுமில்லை

சிறுவயதுமுதல் சீர்கணிதத்தில்
சிறந்துவிளங்கியதால்
சிறுசிறு வகுப்புக்களும்
சிறப்பாக நடத்திவந்தான்
வழமைபோல் வகுப்புக்கு
சென்றுவரும் வேளையிலே
வஞ்சகர் செய்தசதியால்
வழமைக்கு மாறாக நடந்ததொரு நிகழ்வு

விதியோரம் இவன்வருகையில்
சாலைநடுவே வெடித்ததொருகுண்டு
வெடித்தகுண்டு இவன் வெள்ளைமேனியை தொடும்முன்
வேல்போன்று பாய்ந்தன துப்பாக்கி வேட்டுக்கள்
காவலரன் வேறு இருந்ததால்
கைதுசெய்யப்பட்டான் கள்ளமற்ற இவன்
அங்கங்கள் அனைத்தும் இரத்தக்கறையுடன்
அனுமதிக்கப்பட்டான் வைத்திசாலியில்

ஆறுமாதங்கள் வரை நீண்ட
அறுவைச்சிகிச்சையின் பின்
அடைக்கப்பட்டான் விளக்கமறியலில்
அல்லல்படுகின்றான் இன்றுவரை
தமிழன் என்பதால் தப்பிக்கமுடியவில்லை
தப்பேதும் செய்யாது தண்டனையா……….?
தவிப்பது இவன்நெஞ்சம்மட்டுமல்ல
தமிழர் எம்நெஞ்சமும் தான்

எந்தபாவமும் அறியாதவன் என்றுதெரிந்தும்
“ஏனிந்தநிலையுனக்கு ஏதேனும் பாவங்கள் செய்தாயா”
என்றுகேட்டேன் என்நண்பனிடம்
“எலிப்பொறிகூட வைப்பேன் இரையைமட்டும் உண்டுவிட்டு
எலிதப்பிவிடும்வகையில்”
என்றுரைத்த இவன்வார்த்தைகள்
இன்றும் என்காதுகளில் ஒலிக்கின்றது
இதயம் வலிக்கின்றது

வளக்குகள் தொடர்கின்றன
வாதாட்டமும் நீளுகின்றன
விடையேதுவுமில்லை விடுதலையுமின்னுமில்லை
வீணாகக் களிகின்றன காலங்கள் கைதியாகவே
கனிவான என் வேண்டுகோள் ஒன்று
கவிதையாக மட்டும் படித்துவிட்டு  செல்லாது
கடவுளையும் பிரார்த்தியுங்கள் நண்பர்களே
கண்ணியமான இவன் விடுதலைக்காக

அகதிமுகாமிலிருந்து ஒருகுரல் – ஓ நாளை தீபாவளியல்லவா

Posted in Uncategorized on October 16, 2009 by singingstarvijay

ஓ நாளை தீபாவளியல்லவா

எங்கே எனக்கு புத்தாடை……….?
புத்தாடை கொடுக்கும் தந்தைதான்
புதைகுளிக்குள் இருக்கின்றாரே
பொல்லாத இந்த யுத்தத்தால்

எங்கே எனக்கு இனிப்புக்கள்
இனிப்புக்களை எனக்கூட்டும் என்னன்னைதான்
எரிந்து போனாளே
ஈனர்கள் வீசிய எரிகுண்டினால்

எங்கே என் மகிழ்ச்சி
நான் மகிழ்ந்திருந்த என்னுடன்பிறப்புக்கள்தான்
உறங்குகின்றனர் மரணப்படுக்கையில்
மனிதநேயமற்ற யுத்தத்தால்

எங்கே என் துள்ளல்கள்
துள்ளித்திரிந்த கால்கள்தான்
துரப்பறந்ததுவே
துஸ்டர்கள் வீசிய குண்டினால்

எங்கே நான் தீபமேற்றிய வீடு
தீப்பற்றி எரிந்துவிட்டதோ…?
எங்கே நான் கோலமிட்ட முற்றம்
இன்று இரத்தக்கோலத்துடனா

எங்கே நான் சென்ற கோயில்
சிலையிருந்த இடங்களெல்லாம்
மனிதச்சிரசுகள் இருக்கின்றனவாம்
இரத்தமும் சதையுமங்கே இனிய பிரசாதமாம்

எங்கே எனைவாழ்த்தும் உறவுகள்
உயிரற்றுப் போயின சில
உணர்வற்றுப் போயின பல
ஊரே மாயானமாக காட்சியளிக்கின்றன

மலருகின்ற தீபாவளிக்கு நானென்ன செய்வேன்….?
மறைந்த எந்தையிடம் செல்வேனா…?
எரிந்த என்னன்னையிடம் சேல்வேனா…..?
சரிந்த நற்சகோதரரிடம் செல்வேனா…..?

வீட்டுக்கு செல்வேனா…..?
சுடுகாட்டுக்கு செல்வேனா….?
தீபங்கள் ஏற்றுவேனா…..?
தீப்பற்றியெரிந்துவிடுவேனா….?

இன்றே நான் இறந்துவிட்டாலும்
நாளைய தீபாவளிக்கு
நல்வாழ்த்துக்கள் தமிழர்களே
நல்வாழ்த்துக்கள்